அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரில் உள்ள கத்தோலிக்க பள்ளி தேவாலயத்தில், மாணவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த தாக்குதலில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், 14 மாணவர்கள் உட்பட மொத்தம் 17 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவரும் அங்கேயே இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் 23 வயதான ராபின் வெட்மேன் என்பதும், அவர் மூன்றாம் பாலினத்தவர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. தாக்குதலுக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தாக்குதலுக்கு முன், வெட்மேன் தன் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் தாக்குதல் தொடர்பான குறிப்புகளை உள்ளடக்கிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில், அவர் பயன்படுத்திய துப்பாக்கியில் “டிரம்பை கொல்லுங்கள்”, “இஸ்ரேலை எரிக்க வேண்டும்”, “அணு ஆயுத இந்தியா” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. இது அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் மீண்டும் அமெரிக்க பள்ளிகளில் பாதுகாப்பு குறைபாடு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அடிக்கடி நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். உலகளாவிய அளவில் எதிரொலி ஏற்படுத்திய இந்த சம்பவம், மாணவர்கள் பாதுகாப்பு குறித்து புதிய விவாதங்களுக்கு வழிவகுக்கிறது.