பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 17-வது உச்சி மாநாடு ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும். இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்தப் பயணத்தின் போது, ஜூலை 2 முதல் 9 வரை பிரேசில் உட்பட 5 நாடுகளுக்கு அவர் அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.
பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்குச் செல்லும் வழியில், பிரதமர் ஜூலை 2 முதல் 5 வரை கானா, டிரினிடாட் & டொபாகோ மற்றும் அர்ஜென்டினாவுக்குச் செல்வார். திரும்பி வரும் வழியில், அவர் நமீபியாவுக்குச் செல்வார். கானா, டிரினிடாட் & டொபாகோ மற்றும் நமீபியாவுக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், அமைதி, பாதுகாப்பு, பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பயன்பாடு, காலநிலை நடவடிக்கை, சுகாதாரம், பொருளாதாரம், நிதி உள்ளிட்ட முக்கிய உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார். இந்த உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார்.
பின்னர், அவர் பிரேசிலியாவுக்குச் சென்று, அங்கு பிரேசிலுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்வார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார். வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம், விவசாயம், சுகாதாரம் மற்றும் மக்கள் தொடர்புகள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அப்போது விவாதிக்கப்படும்.
பிரதமர் மோடியின் அர்ஜென்டினா பயணம் பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.