வங்கதேசத்தின் இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அந்நாட்டின் பொதுத்தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இடைக்கால தலைவராக பொறுப்பேற்று பத்து மாதங்கள் கடந்த நிலையில், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் அண்டை நாடான இந்தியாவிற்கும் முக்கியமாகும், ஏனெனில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, மாணவர் போராட்டங்கள் காரணமாக பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனையடுத்து, வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவ கண்காணிப்பின் கீழ் முகமது யூனுஸ் இடைக்கால தலைவராக அறிவிக்கப்பட்டார்.
ராணுவத் தலைவர் வேக்கர் உஸ்ஜமான், கடந்த ஆண்டு டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்த நிலையில், யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இப்போது தேர்தலை 2026 ஏப்ரலுக்கு தள்ளியுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்பாக, தேர்தலை தாமதிப்பதற்கான உள்நோக்கத்துடன் யூனுஸ் செயல்படுகிறார் என விமர்சனங்கள் எழுந்தன.
ஏற்கனவே ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது வங்கதேச தேசியக் கட்சி (BNP) மிகப்பெரிய அரசியல் சக்தியாக உள்ளதால், அவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் எனப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், BNP உள்ளிட்ட பல கட்சிகள் யூனுஸுக்கு தேர்தல் நடத்த வலியுறுத்தி வந்தன.
இவற்றுக்கிடையில், 2026 ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என யூனுஸ் கூறியுள்ளார். இதற்கான அனைத்து அறிவிப்புகள், நடவடிக்கைகள், தேர்தல் ஆணையத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த பக்ரீத் பண்டிகைக்கு முன், நீதி மற்றும் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், மனித உரிமைகள் மீறல்கள், குறிப்பாக மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் முக்கிய முன்னேற்றம் காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முந்தைய ஆண்டு நடந்த வன்முறை மற்றும் கிளர்ச்சிப் போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கான மரியாதையாக, ஜனநாயகத் தேர்தலை நடத்த விரும்புவதாகவும், இது முழுமையாக சுதந்திரமான, நியாயமான, பாரபட்சமற்ற தேர்தலாக நிலைநிறுத்தப்படும் என்றும் யூனுஸ் கூறினார்.
இந்த தேர்தல், வங்கதேசம் தனது ஜனநாயகப் பாதையை மீண்டும் நிலைநாட்டும் ஒரு முக்கிய தருணமாகக் கருதப்படுகிறது. தேசிய அரசியல் நிலைமை, சர்வதேச ஒற்றுமை, மற்றும் மனித உரிமைகள் ஆகியவையும் இந்த தேர்தல் வழியாக புதிய வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.