டாக்கா: வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, வன்முறை ஏற்படும் அபாயம் குறித்து இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கவலை தெரிவித்துள்ளார். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முகமது யூனுஸ், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, வாக்குச் சாவடிகளின் பாதுகாப்பு, சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்குப்பதிவு நடைமுறைக்கான முக்கிய நிபந்தனை என்றும், தேர்தல் வரலாற்றில் அமைதியான சூழலை உருவாக்குவது அவசியம் என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், அரசியல் பதட்டம் மற்றும் தேர்தல் நேர வன்முறைகள் ஏற்படக்கூடும் என்பதையும் அவர் எச்சரித்தார். இதனால், தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை பராமரிக்க அரசு விசேஷ திட்டங்களை முன்னெடுக்கிறது.
வங்கதேச அரசின் அறிக்கையில், ஜனநாயகத்திற்கு சாதகமான, பாதுகாப்பான மற்றும் அமைதியான தேர்தலை நடத்துவது தற்போதைய இடைக்கால அரசின் மிகப்பெரிய பொறுப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.