அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுத் துறை நாசா, தற்போது ஆழ்ந்த பொருளாதார அழுத்தத்தின் மூலம் ஒரு முக்கிய மாற்றத்தை எதிர்கொள்கிறது. அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது ஆட்சி தொடங்கிய பிறகு, 2,000க்கும் மேற்பட்ட மூத்த நாசா ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிட்டிகோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் அறிவியல் மற்றும் மனித விண்வெளிப் பயணத் துறைகளில் பணியாற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள், மேலாண்மை, நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இது வெள்ளை மாளிகையின் விண்வெளி கொள்கையில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

பணிநீக்கம் செய்யப்பட உள்ளவர்களில் பெரும்பாலோர் GS-13 முதல் GS-15 வரையிலான ஊழியர்கள் எனக் கூறப்படுகிறது. அவர்களுக்கு முன்கூட்டிய ஓய்வு, இழப்பீடு மற்றும் ஒத்திவைக்கப்பட்ட ராஜினாமா போன்ற வசதிகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் விண்வெளிக் கொள்கைக்கு மட்டுமல்ல, அறிவியல் ஆராய்ச்சி துறைக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த முடிவுகள், முக்கியமான திட்டங்களை நிறுத்தும் சூழ்நிலையையும் உருவாக்கும் என்ற அச்சம் அதிகரிக்கிறது.
2026ம் ஆண்டுக்கான அமெரிக்கா பட்ஜெட்டில் 25% குறைப்பு செய்யப்பட்டதனாலே இந்த நடவடிக்கைகள் ஏற்பட்டுள்ளதாக நாசா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மொத்தம் 5,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 1960-களுக்குப் பிறகு நாசா சந்திக்கின்ற மிகக் கடுமையான நிதிச் சவால் இது என நிபுணர்கள் கருதுகின்றனர். பல அறிவியல் திட்டங்கள் இந்த தாக்கத்தில் தாமதிக்கப்படலாம் அல்லது நிரந்தரமாகவே முடக்கப்படலாம் என்பதும் கவலையை உருவாக்கியுள்ளது.
இதன் பின்னணியில், டிரம்ப் தனது புதிய நாசா நிர்வாகியாக போக்குவரத்து செயலாளர் சீன் டஃபியை நியமித்திருக்கிறார். இதனால் தனியார் விண்வெளி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவு குறைவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, எலான் மஸ்க் கூட்டாளியான ஜாரெட் ஐசாக்மேன் இந்த பதவிக்கு வரலாம் என கருதப்பட்ட நிலையில், இந்த மாற்றம் மஸ்க்கிற்கும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சமீப காலத்திலேயே நாசா மிக முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ள நிலையில், இத்தகைய பரபரப்பான மாற்றங்கள், அதன் எதிர்கால முன்னேற்றத்தில் புதிய தடைகளை உருவாக்கக்கூடும் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.