ஜெரூசலம்: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரிட்டன் அறிவித்ததற்கு இஸ்ரேல் கடும் எதிர்வினை தெரிவித்துள்ளார். காசாவில் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60,000-ஐ தாண்டி விட்ட நிலையில், இந்த அரசியல் மாற்றம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன், செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மாநாட்டில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு முடிவுக்காண முயற்சி செய்வதாகவும், பாலஸ்தீன மக்களின் சுய அதிகாரத்தை மதிக்கவே இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

இதைதொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த முடிவை கடுமையாக கண்டித்து, “பிரிட்டனின் இந்த செயலால் எதிர்பாராத விளைவுகள் ஏற்படக்கூடும். இஸ்லாமிய ஜிகாதி நாடு உருவாகும் வாய்ப்பு உள்ளது. இது எதிர்காலத்தில் பிரிட்டனுக்கே பெரும் அபாயமாக மாறும்,” என எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஹமாஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு இது வெகுமதியாகும்; பாதிக்கப்பட்ட இஸ்ரேல் மக்களுக்கு இது தண்டனையாக மாறும். இது பிரித்தானியாவின் நிர்வாகக் கணக்கெடுப்பில் பெரும் தவறாகும்” எனக் கூறியுள்ளார்.
தற்போதைய சூழலில் இந்தியா, சீனா, ரஷியா, பிரேசில் உள்ளிட்ட 140 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவேண்டும் என முன்வந்து உள்ளன. பிரிட்டன் இதனை தொடரும் போக்கு சர்வதேச ரீதியில் புதிய அதிர்வலைகளை உருவாக்கும் எனத் தெரிகிறது.