ஜெருசலேம்: சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு பலவீனமடைந்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினரால் இஸ்ரேலும் தாக்கப்பட்டது. இதன் விளைவாக, இஸ்ரேல் ஹிஸ்புல்லாவை ஒழிக்க முடிவு செய்து சில நாட்களுக்கு முன்பு லெபனானில் தரைவழி தாக்குதலை நடத்தியது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகளான இப்ராஹிம் அகீல் மற்றும் அலி கராக்கி ஆகியோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார். நஸ்ரல்லாவின் அடுத்த வாரிசான ஹஷேம் சபீதின் கதையையும் இஸ்ரேல் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நஸ்ரல்லாவின் வாரிசான ஹஷேம் சபீத்தை இஸ்ரேல் ராணுவம் கொன்றதை நெதன்யாகு உறுதி செய்தார்.
மேலும் அவர் கூறியதாவது ஹிஸ்புல்லா அமைப்பை அழித்துவிட்டோம். ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உட்பட ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளை கொன்றுள்ளோம். இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது பலவீனமாக உள்ளது.
மாற்றத்திற்கான வாய்ப்பை லெபனான் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் இப்போது உங்கள் நாட்டை மீட்டெடுத்து அமைதி மற்றும் செழிப்புக்கான பாதைக்கு திரும்பலாம். லெபனான் மக்கள் தங்கள் நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கத் தவறினால், மோசமான விளைவுகள் ஏற்படும். அவர் கூறியது இதுதான்.