லண்டன்: அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனும் புலம்பெயர்ந்தோருக்கான கடுமையான சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இதுவரை 5 ஆண்டுகள் வாழ்ந்தால் நிரந்தரமாக குடியேறும் உரிமை கிடைத்த நிலையில், இனி அந்த காலம் 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நிரந்தர வசிப்பதற்கான பாதை மேலும் கடினமாகியுள்ளது.

முன்னதாக, அகதிகளாக தஞ்சம் அடைந்தவர்கள் 5 ஆண்டுகள் வாழ்ந்த பின் நிரந்தர வசிப்பு உரிமை பெற்றனர். அதோடு, தங்கள் குடும்பத்தினரையும் அழைத்து வருவதற்கான உரிமை வழங்கப்பட்டது. ஆனால், புதிய விதிப்படி அந்த நடைமுறைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. குடும்பத்தினரை அழைத்துவருவதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே செப்டம்பர் மாதத்தில் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ள புதிய நடைமுறைகளின் படி, ஆங்கிலம் பேசுதல், குற்றங்களில் ஈடுபடாமல் இருத்தல் போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. எனினும், அகதிகளாக தஞ்சம் புகுபவர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்றும், அவர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உரிமைகள் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோருக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது பிரிட்டனிலும் அதே போக்கு தொடர்கிறது. இதனால் புலம்பெயர்ந்து வாழ விரும்புவோர் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.