பியோங்யாங்: கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை தூண்டி, அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தப்போவதாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
கிம் ஜாங் உன்னின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம், “கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தினால், எந்தவித தயக்கமும் இல்லாமல் எதிரிகள் மீது அனைத்து வகையான தாக்குதல்களையும் பயன்படுத்துவோம்.
அணு ஆயுதங்களும் விதிவிலக்கல்ல. தென் கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு அணுசக்தியை அடிப்படையாகக் கொண்டு தங்கள் இராணுவக் கூட்டணியை வலுப்படுத்த முயல்வதால் வட கொரியாவின் அணுசக்தி திறன்கள் முழுமையாக வளர்க்கப்பட வேண்டும்.
இது கொரிய தீபகற்பத்தில் அதிகார சமநிலையை உடைக்கும் அபாயத்தை அதிகரிக்கும்,” என்றார்.
அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு எதிராக கிம் பல மிரட்டல்களை விடுத்தாலும், அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதிய மிரட்டல்கள் கவலையளிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது.
வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, அமெரிக்காவின் அணு ஆயுதங்களையும், தென் கொரியாவின் திறன்களையும் ஒருங்கிணைக்கும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் கையெழுத்தானது.
தென் கொரியாவிடம் அணு ஆயுதங்கள் இல்லை. வடகொரியா அணு ஆயுதங்களை பயன்படுத்த முயற்சித்தால், அது கிம் ஆட்சிக்கு முடிவாகும் என அமெரிக்கா மற்றும் தென்கொரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.