வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை கொல்ல திட்டமிட்டு துப்பாக்கியுடன் வந்த நபரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர், 5ம் தேதி நடக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர், டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுகிறார். டிரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அவரைக் கொல்ல முயற்சிகள் நடந்து வருகின்றன.
கடந்த ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் மீது முதல்முறையாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது காதில் காயம் ஏற்பட்டது. இரண்டாவது முறையாக, டிரம்ப் செப்டம்பர் மாதம் புளோரிடாவின் வெஸ்ட் பால்ம் பீச்சில் உள்ள தனது கோல்ஃப் கிளப்பில் விளையாடினார். அப்போது, வளாகத்தின் சுற்றுச்சுவர் அருகே, ஒருவர் டிரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
ஹவாயை சேர்ந்த ரியான் வெஸ்லி ரோத் (58) என அடையாளம் காணப்பட்ட அந்த நபரை ரகசிய அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர். இந்நிலையில் இன்று (அக்.14) 3வது முறையாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை கொல்ல முயற்சி நடந்துள்ளது.
அமெரிக்காவின் கோசெல்லா நகரில் நடைபெற்ற பேரணியில் டிரம்ப் கலந்து கொண்ட போது போலி பாஸ்போர்ட் மற்றும் துப்பாக்கியுடன் வந்த நபரை போலீசார் கைது செய்தனர். 49 வயதான இவர் வெம் மில்லர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மில்லர் ஒரு வலதுசாரி அரசாங்க எதிர்ப்புக் குழுவில் முக்கிய நபராக இருப்பதாக போலிசார் சந்தேகிக்கின்றனர். டொனால்ட் டிரம்பை கொல்ல மில்லர் சதித்திட்டம் தீட்டியதாக போலீசார் தெரிவித்தனர். முன்னாள் அமெரிக்க அதிபர் மீதான மூன்றாவது கொலை முயற்சியைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.