லிஸ்பன் நகரில் நடைபெற்ற பல்கலை நிகழ்ச்சியில் போர்ச்சுக்கல் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சோசா, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து கடுமையான விமர்சனம் வெளியிட்டார். உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டின் தலைவராக இருந்தாலும், டிரம்ப் பாரபட்சமின்றி ரஷ்யாவுக்கு ஆதரவாளராக செயல்படுகிறார் என அவர் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு உக்ரைன் ‘நேட்டோ’வில் இணைய முயற்சித்தபோது, ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து போரைத் தொடங்கியது. இந்த யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டு அதை முடிக்க முயற்சித்து வருகிறார். இதற்காக ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புடினுடன் அவர் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, பின்னர் வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடனும் கலந்துரையாடினார்.
இந்நிலையில், டிரம்ப் ஒரு தரப்புடன் மட்டுமே உரையாட விரும்புகிறார் என்றும், அவரது நடவடிக்கைகள் அமெரிக்காவின் பாரம்பரிய கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகள் மற்றும் உக்ரைனுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன என்றும் போர்ச்சுக்கல் அதிபர் வலியுறுத்தினார். இது போன்ற நிலைப்பாடுகள், சர்வதேச உறவுகளை பாதிக்கும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.
டிரம்ப் வெளிப்படையாக ரஷ்யாவின் கருவியாக மாறியுள்ளார் என்று கூறிய அவர், அமெரிக்கா தனது பழைய கூட்டணிப் பங்காளிகளின் நலன்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டினார். உலக அரசியல் சூழலில் டிரம்பின் பாதை, மேற்கத்திய நாடுகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது என அவர் பகீர் தகவலை வெளிப்படுத்தினார்.