மிச்சிகன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வரும் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 3 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 23-ம் தேதி ஐநா சபையில் பிரதமர் மோடி ‘எதிர்கால உச்சி மாநாடு’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டின் இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் மீதான இரண்டாவது கொலை முயற்சிக்குப் பிறகு முதல் முறையாக பொதுவில் தோன்றினார்.
மிச்சிகனில் உள்ள பிளின்ட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், “இந்தியா-அமெரிக்க வர்த்தக உறவை இந்தியா பெருமளவில் துஷ்பிரயோகம் செய்கிறது. இருப்பினும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆச்சரியமாக இருக்கிறார். அடுத்த வாரம் அவர் அமெரிக்கா வரும்போது அவரை சந்திப்பேன்” என்றார்.
எவ்வாறாயினும், இந்திய வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட பிரதமரின் பயணத்திட்டத்தின் அறிவிப்பில் கூட, சந்திப்பு பற்றிய உறுதியான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடக்கிறது. தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
டிரம்ப்-கமலா ஹாரிஸ் நேரடி விவாதத்திற்குப் பிறகு கமலா ஹாரிஸ் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.