புது டெல்லி: பிரதமர் மோடி ஜப்பான் மற்றும் சீனாவுக்கு 4 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக சென்றுள்ளார். முதல் கட்டமாக, நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து, ஆகஸ்ட் 31 அன்று சீனாவுக்குச் சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பார். 15-வது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சி மாநாடு ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும்.
அதில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து டோக்கியோவுக்குப் புறப்பட்டார். இந்த உச்சிமாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவைச் சந்திப்பார். அப்போது, பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்கள் விவாதிப்பார்கள். டோக்கியோவிலிருந்து, பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 30-ம் தேதி சீனாவின் தியான்ஜினுக்குப் புறப்படுகிறார்.

அங்கு, ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பார். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ, சுபியாண்டோ, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிற தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
ஜூன் 2018-ல் சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற SCO மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். 2019-ம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சீனா வருகையை பிரதமர் மோடி முற்றிலுமாக புறக்கணித்தார். இந்த சூழலில், சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு SCO மாநாட்டில் பங்கேற்க அவர் சீனாவுக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.