அல்பாட்டா: கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். மூன்று நாடுகளுக்கான ஐந்து நாள் அதிகாரப்பூர்வ பயணத்தின் முதல் கட்டமாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு 15-ம் தேதி விஜயம் செய்தார்.
திங்கள்கிழமை மாலை அவர் அங்கிருந்து புறப்பட்டார். இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று காலை கனடாவை அடைந்தார். அல்பாட்டாவில் உள்ள கால்கரி விமான நிலையத்தில் அவருக்கு கனேடிய அரசு பிரமாண்ட வரவேற்பு அளித்தது. இதில் கனேடிய உயர் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். கனடாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹலிமா சாடியா கூறுகையில், “கனடாவில் 1.5 மில்லியன் இந்திய வம்சாவளி மக்கள் வசிக்கின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து வருவது இந்திய வம்சாவளி மக்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.” கனடாவில் உள்ள இந்து சங்கத்தின் தலைவர் விஷால் சைனி, “பிரதமர் மோடியை நாங்கள் வரவேற்கிறோம். இந்தியா மற்றும் கனடாவின் பொருளாதார வளர்ச்சியில் 15 லட்சம் இந்திய வம்சாவளியினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்” என்றார். மாலையில், கனனாஸ்கிஸில் ‘ஜி7’ உச்சி மாநாடு தொடங்கியது.
பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டார். அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டின் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி இன்று குரோஷியாவுக்குச் செல்கிறார். அங்கு, அந்நாட்டு அதிபர் ஜோரன் மிலனோவிக் மற்றும் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிலென்கோவிக் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.