வாஷிங்டன்: மார்ச் 13 ஆம் தேதிக்குள் தேவையற்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். அரசாங்க செலவுகளைக் குறைப்பதற்கும் நிர்வாகத்தை நெறிப்படுத்துவதற்கும், சிறந்த நிர்வாகத்திற்காக ‘DOGE’ (அரசு திறன் துறை) என்ற புதிய துறையை உருவாக்கியுள்ளார். தொழிலதிபர் எலான் மஸ்க் இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் துறை ஏற்கனவே பல துறைகளில் உள்ள ஊழியர்களை தற்காலிக விடுப்பில் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், டிரம்ப் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், மார்ச் 13 ஆம் தேதிக்குள் தேவையற்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. சில அரசு ஊழியர்கள் வேலை செய்யவில்லை என்றும், இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார். ஒவ்வொரு அரசுத் துறையும் பணிநீக்கத் திட்டங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்ற எலான் மஸ்க், செலவுகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த ஆண்டு மட்டும் $1 டிரில்லியன் செலவினங்களைக் குறைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களில் எந்த மாற்றங்களும் இருக்காது என்று டிரம்ப் உறுதியளித்தார். அவர் பதவியேற்றதிலிருந்து 100,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.