மாஸ்கோ: பாகிஸ்தானுக்கு ‘ஜெட்’ போர் விமான இன்ஜின்களை வழங்குவதாக பரவிய செய்தியை ரஷ்யா கடுமையாக மறுத்துள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘ஜே.எப்–17 தண்டர் பிளாக் 3 ஜெட்’ விமானங்களுக்கு ரஷ்யா தனது மேம்படுத்தப்பட்ட ஆர்.டி–93 எம்.ஏ. இன்ஜின்களை வழங்க உள்ளதாக தகவல்கள் பரவியிருந்தன.

ஆனால் ரஷ்ய அதிகாரிகள் இதனை பாசாங்கான செய்தி என கூறி, இந்தியாவை பாதிக்கும் வகையில் எந்த ராணுவ ஒத்துழைப்பும் பாகிஸ்தானுடன் இல்லை என உறுதி செய்துள்ளனர். வரும் டிசம்பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா–ரஷ்யா இடையிலான நட்புறவை கெடுக்கும் நோக்கில் இந்த செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பல நாடுகளின் தலைவர்களுடன் நட்பு பேச்சுவார்த்தை நடத்தியது பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சவுதி அரேபியா உட்பட பல நாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை செய்து கொண்டு, இந்தியாவை எதிர்த்து தன்னைத்தான் உயர்த்திக்காட்ட முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி ரஷ்யா பாகிஸ்தானுக்கு இன்ஜின் வழங்குவதாக கூறி மத்திய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. ஆனால் ரஷ்யா இதை முற்றிலும் மறுத்ததால், இந்தியா–ரஷ்யா உறவு மீண்டும் வலுப்பெற வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.