உக்ரைனின் தொடர் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை அதிகரித்து வருவதாக ரஷ்யா அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த சூழலில், ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக், எரிபொருள் ஏற்றுமதிக்கு ஆண்டு இறுதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

கிரிமியா உள்ளிட்ட பல பிராந்தியங்களில் எரிபொருள் ரேஷன் முறையில் வழங்கப்படுகின்றது. சில எரிபொருள் நிலையங்களில் முழுமையாக பெட்ரோல் தீர்ந்துவிட்டதாகவும், விலைகள் கடந்த மாதத்தை விட மூன்றில் ஒரு பங்கு உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய டீசல் உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருக்கும் ரஷ்யா, தனது ஏற்றுமதி வருவாயின் பெரும்பகுதியை எரிசக்தி துறையில் பெற்றுவருகிறது. எனவே, இந்த தடை ரஷ்யாவின் பொருளாதாரத்தையே பாதிக்கக்கூடும். அதேசமயம், கச்சா எண்ணெயின் முக்கிய இறக்குமதியாளராக இருக்கும் இந்தியாவுக்கும் சாத்தியமான தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியில் ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதால், உலக சந்தையில் விலை உயர்வு தவிர்க்க முடியாததாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும், மாற்று நாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரித்து, தேவையை சமன்படுத்தும் நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.