உலக வர்த்தக சூழலில் பெரும் பதற்றங்களை ஏற்படுத்திய அமெரிக்கா-சீனா வர்த்தக போர், பல நாடுகளின் வெளிநாட்டுப் பாய்ச்சலை மாற்றி அமைத்தது. இதன் தாக்கமாக சீனா, ரஷ்யாவுடன் நெருக்கத்தை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், பழைய முரண்பாடுகளை மறந்து இந்தியாவுடனும் மீண்டும் நட்புறவை புதுப்பிக்க ஆர்வம் காட்டி வருகிறது. இந்த சூழலில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா இடையிலான மூவகை உறவை மீண்டும் செயலில் கொண்டுவரும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

2002ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மூத்தரப்பு அமைப்பு, பின்னர் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு அடித்தளமாக விளங்கியது. ஆனால், 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முக்கியமான சந்திப்புகள் நடைபெறவில்லை. இதற்கான காரணங்களில், கோவிட் தொற்று, லடாக் எல்லைப் பிரச்சனை, பாகிஸ்தானுடன் சீனாவின் நெருக்கம் என இந்தியா-சீன உறவுகளில் ஏற்பட்ட தளர்வுகள் குறிப்பிடத்தக்கவை. இது மூன்று நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார உறவுகளை பாதித்தது.
அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சீன அமைச்சர் வாங் யீ மற்றும் ரஷ்ய அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சந்தித்து, முக்கிய உரையாடலை மேற்கொண்டனர். இந்த சந்திப்பின் போது, மூவகை கூட்டமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க விருப்பம் இருப்பதையும், முன்னேற்றங்களை தொடர விரும்புவதாகவும் அனைத்து தரப்பும் சம்மதம் தெரிவித்தன.
மீண்டும் செயல்படத் தொடங்கிய RIC அமைப்பு, சர்வதேச அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி போன்ற முக்கிய அம்சங்களில் பங்களிக்கக்கூடியது என கருதப்படுகிறது. சீனாவும், இந்தியா–ரஷ்யா ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக இந்த முயற்சிக்கு முழு ஆதரவை வழங்கியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவுடன் வரும் எதிர்கால போட்டியை சமாளிக்க இந்த மூவகை உறவு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.