மாஸ்கோ: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், சென்னை-ரஷ்யா இடையேயான கடல்வழி பாதை திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். முதல் நாளில் ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். 2-வது நாளாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லி திரும்பினார். பிரிக்ஸ் மாநாட்டின் இறுதி நாளான நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:- உலகம் முன்னேறி வருகிறது. ஆனால் சில பழைய பிரச்னைகள் இப்போது பெரிய பிரச்னைகளாக உருவாகி வருகின்றன.
இந்தப் பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும். இது போருக்கான நேரமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இதே கருத்தை அவர் பிரிக்ஸ் மாநாட்டிலும் தெரிவித்தார். இதை உலகம் உணர வேண்டும். மேற்கு ஆசியாவில் தற்போது நிலவும் பதற்றம் கவலையளிக்கிறது. அங்கு பதற்றம் அதிகரித்தால், ஒட்டுமொத்த மனித இனமும் பாதிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
இறுதி மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், “அமெரிக்க டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் நாடுகள் சார்பில் புதிய பணப்பரிவர்த்தனை உருவாக்க வேண்டும். குளோபல் சவுத் மற்றும் குளோபல் ஈஸ்ட் நாடுகள் ஒன்றிணைய வேண்டும். ஆர்வமுள்ள நாடுகள் வடக்கு கடல் பாதையில் இணையலாம்.
வடக்கு-தெற்கு சர்வதேச போக்குவரத்து திட்டம்,” என்றார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடையால், ரஷ்யாவின் சர்வதேச கடல் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் ஆர்டிக் கடலின் அடிப்படையில் வடக்கு கடல் பாதை திட்டத்திற்கு ரஷ்யா முன்னுரிமை அளித்து வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் சென்னையையும், ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரையும் இணைக்கும் கடல் வழியை இரு நாடுகளும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. புதிய கடல் வழித் திட்டம் தொடர்பாக இந்தியா மற்றும் ரஷ்ய அதிகாரிகளின் கூட்டம் டெல்லியில் அண்மையில் நடைபெற்றது. அப்போது ஆர்டிக் கடலில் பனியை உடைக்கும் சரக்குக் கப்பல்களின் வடிவமைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதன்படி, ரஷ்ய அரசுக்கு சொந்தமான ரோசோடோம் நிறுவனத்துக்காக 4 அதிநவீன கப்பல்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.6,000 கோடி. ஆர்டிக் கடலில் சரக்குக் கப்பல்களை இயக்க இந்திய மாலுமிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதாகவும் ரஷ்யா உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டின் போது, வடக்கு கடல் வழி திட்டத்தில் ஆர்வமுள்ள நாடுகள் இணைய வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் சென்னை- விளாடிவோஸ்டாக் கடல் வழி சர்வதேச முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.