மாஸ்கோ: உலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி வரும் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யா ஒரு புதிய முன்னேற்றத்தை அறிவித்துள்ளது. பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டிற்கு தயாராகி விட்டதாக அந்நாட்டு மத்திய மருந்து மற்றும் பயோலஜிக்கல் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக நடந்த ஆய்வுகளின் முடிவாக கடந்த மூன்று ஆண்டுகளாக மருத்துவ பரிசோதனையில் இருந்த இந்த தடுப்பூசி தற்போது பயனுக்கு வரத் தயாராகியுள்ளது. விரைவில் அரசின் ஒப்புதலுக்கு பிறகு உலகளவில் நோயாளிகளுக்கு கிடைக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் புற்றுநோய் கட்டியைச் சுருக்குவதோடு, குணமடையும் வேகத்தை 60 முதல் 80 சதவீதம் அதிகரிக்கும் திறன் கொண்டது என பரிசோதனைகள் உறுதி செய்துள்ளன. இதனால், புற்றுநோயால் தவிக்கும் கோடிக்கணக்கானோருக்கு புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது.
ரஷ்யா விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான மேலும் பல தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இது உலக சுகாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் நம்பப்படுகிறது.