காஸா: அக்டோபர் மாதம் முதல் 12 டிரக்குகள் மட்டுமே காசாவிற்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வடக்கு காஸாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட 34 லாரிகளில் கடந்த இரண்டரை மாதங்களில் 12 லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலிய இராணுவம் வேண்டுமென்றே விதித்துள்ள கட்டுப்பாடுகள் உணவு மற்றும் தண்ணீரை கொண்டு செல்வதை கடினமாக்கியுள்ளது. இவ்வாறான கட்டுப்பாடுகள் காஸாவில் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆக்ஸ்பாம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், “மனிதாபிமான உதவி கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் ராணுவம் இரக்கமின்றி நடந்து கொள்கிறது. உணவு மற்றும் தண்ணீர் லாரிகளை ஏற்றிச் செல்வதற்கான அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகும், ஜபாலியாவில் தேவையில்லாமல் லாரிகளை நிறுத்துகிறது.
இராணுவப் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீரை இறக்குவதற்கும் இது ஓட்டுநர்களை கட்டாயப்படுத்துகிறது. கடந்த மாதம் மட்டும் 11 லாரிகள் இவ்வாறு நிறுத்தப்பட்டன” என்று ஆக்ஸ்பாம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதேபோல், நியூயார்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒரு அறிக்கையில், “இஸ்ரேலிய அதிகாரிகள் காசாவுக்கு உணவு மற்றும் தண்ணீரை வரவிடாமல் தடுக்கிறார்கள். அங்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலின் நடவடிக்கைகள் பலி எண்ணிக்கையை அதிகரிக்கும். அந்த அமைப்பு டிசம்பர் 19-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 45,000-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலி: இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையே 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய போர் இன்று வரை ஓயவில்லை. இரு நாடுகளின் அதிகார மையங்களுக்கு இடையே பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் இன்னும் தங்கள் உயிரை தியாகம் செய்து வருகின்றனர்.
இருப்பினும் போரின் தீவிரம் குறையவில்லை. ஹமாஸை அழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் கூக்குரலிடுகிறது. இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 45,220 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான நெருக்கடி நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இதற்கிடையில், தெற்கு காசாவின் அல்-மவாசியில் நியமிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் – காசா மோதல்கள் குறையாமல் தொடர்வதாக அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.