ரியாத்: சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல், 20 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த பிறகு, 36 வயதில் உயிரிழந்தார். ‘தூங்கும் இளவரசர்’ என அன்புடன் அழைக்கப்பட்ட இவர், சவுதி அரசின் நிறுவனர் அப்துல் அஜீசின் கொள்ளுபேரனாகவும், காலித் குடும்பத்தின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தார்.
2005ஆம் ஆண்டு, அவருக்கு 15 வயதாக இருக்கும்போது, லண்டனில் ராணுவப் பயிற்சியில் கலந்து கொண்டபோதே ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கினார். அந்த விபத்தின் பின் கோமா நிலைக்கு சென்ற இவர், கடந்த இரு தசாப்தங்களாக மருத்துவக் கண்காணிப்பில் வைத்தே இருந்தார். உலகத்திலேயே மிக நீண்ட காலமாக கோமாவில் இருந்தவர்களில் ஒருவராக இவரது வாழ்க்கை பதிவாகியுள்ளது.

இருபது ஆண்டுகள் பல்வேறு சிகிச்சைகள் எடுத்தலும், அவர் மீள முடியாத நிலையில் இருந்தார். இறுதியில் அவரது உயிர் பிரிந்தது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது தந்தையும் சவுதி இளவரசருமான காலித் பின் தலால் வெளியிட்டுள்ள செய்தியில், ‘அவரது மறைவு எங்களை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நம் அன்பு மகனின் உயிர் பிரிந்து விட்டது’ என உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இளவரசரின் இறுதிச் சடங்கு, இன்று ஜூலை 20ம் தேதி, சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள மசூதியில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகத் தலைவர்கள் மற்றும் அரச குடும்பங்களின் அனுதாபங்கள் சவுதி அரேபியாவை நோக்கி தொடர்ந்து பாய்கின்றன.