தென்கொரியா: தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் பதவிநீக்கம் செய்ய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தென் கொரியாவில் கடந்த டிசம்பர் மாதம் 3-ந்தேதி ராணுவ அவசர சட்டத்தை அதிபர் யூன் சுக் இயோல் திடீரென்று பிறப்பித்தார். வடகொரியாவுடன் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடுவதாக கூறி ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் வெடித்ததால் ராணுவ சட்டத்தை திரும்ப பெற்றார். இவ்விவகாரத்தில் யூன் சுக் இயோல் மீது கிளர்ச்சி குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அதிபர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தென் கொரிய சட்டப்படி யூன் சுக் இயோல் மீதான பதவி நீக்க தீர்மானத்தை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இவ்வழக்கில் இன்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில் யூன் சுக் இயோல் மீதான பதவி நீக்கும் தீர்மானத்தை அரசியலமைப்பு கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பளித்தது.
ராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியபோது நடைமுறைகளை யூன் சுக் இயோல் பின்பற்றவில்லை என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளது என தெரிவித்துள்ளது. அரசியலமைப்பை மீறியதற்காக அவரை பதவி நீக்கம் செய்ய நீதிபதிகள் குழு ஒருமனதாக வாக்களித்தது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், யூனின் நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக நிர்வாகத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறுகின்றன. இதன் மூலம் அரசியலமைப்பு ஒழுங்கையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. ஜனநாயகக் குடியரசின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
இதனால் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்கிறோம் என்று தெரிவித்தனர். மேலும், புதிய அதிபரை தேர்வு செய்வ–தற்காக 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட 2-வது தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆவார். இதற்கு முன் 2017-ம் ஆண்டு அரசியல் குற்றச்சாட்டு காரணமாக அப்போதைய அதிபர் பார்க் குவென்-ஹே அதிபர் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.