இலங்கை: பொருளாதார நெருக்கடி மற்றும் தொடர் போராட்டங்களால் முடங்கியிருந்த இலங்கை சுற்றுலாத்துறை படிப்படியாக மீண்டு வருவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இயற்கை வளங்கள் நிறைந்த இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அங்கு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தாலும், அதைத் தொடர்ந்து நடந்த மாணவர் போராட்டங்களாலும் நாட்டின் சுற்றுலாத் துறை முடங்கியது.
மேலும், இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. பல மாதங்களாக அங்கு இயல்பு நிலை திரும்பிய நிலையில், சுற்றுலாத் துறை படிப்படியாக மீண்டு வருகிறது.
இது தொடர்பில் பேசிய அந்நாட்டில் பிரதானமாக இயங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டல், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு புதிய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக தெரிவித்தார்.
நாட்டின் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் மனோகரனின் கூற்றுப்படி, கொரோனா மற்றும் எதிர்ப்புகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு சுமார் 14 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்த வருடத்தில் இதுவரை 13 இலட்சம் பேர் வருகை தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வர விரும்புவதாகவும் அவர் கூறினார். இலங்கை அரசின் தொடர் நடவடிக்கைகளால் இலங்கை சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.
இதனால், அந்நாட்டு சுற்றுலா தொடர்பான தொழில்களில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.