வாஷிங்டன்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தை தொடர்ந்து ரூ.15,516 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் 17,613 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இந்துஜா குழுமம், தமிழக மின்சார வாகன சூழலுக்காக பேட்டரி சேமிப்பு அமைப்புகளில் மட்டும் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ஈர்க்கப்பட்ட முதலீடுகள் வெறும் கணக்குகளில் மட்டும் அல்ல. அவை நம் இளைஞர்களுக்கான வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகளை பிரதிபலிக்கின்றன. இந்த வெற்றி, தமிழக வளர்ச்சி பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாகும்” என்று ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு திமுகவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை மாநிலத்திற்கு ஈர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், தமிழகத்தை தொழில் வளர்ச்சியில் முன்னணியில் நிறுத்துவதே அரசின் குறிக்கோள் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.