வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 2-ம் தேதி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்தார். அமெரிக்கா மீது மற்ற நாடுகள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். டிரம்பின் கூடுதல் வரிக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. டிரம்பின் அறிவிப்பால் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளும் கடும் சரிவை சந்தித்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிரபல கோடீஸ்வரர் எலான் மஸ்க் ஆகிய இருவருக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் ‘ஹேண்ட்ஸ் ஆஃப்’ எதிர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன. இந்தப் பேரணியில் வெளிநாட்டினர் மற்றும் அமெரிக்காவில் உள்ள உள்ளூர் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் மிகப் பெரிய போராட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தப் போராட்டம், அமெரிக்கர்கள் மத்தியில் பெருகிவரும் விரக்தியின் அறிகுறியாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் மற்றும் அவரது கொள்கைகளுக்கு எதிராகவும், அரசாங்க நிர்வாகத்தில் எலோன் மஸ்க் தலையிடுவதற்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் 150-க்கும் மேற்பட்ட அமைப்புகளால் 1,200-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணிகளும் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
ஜனவரி மாதம் டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடந்த மிகப்பெரிய ஒரு நாள் போராட்டமாக இது கருதப்படுகிறது. வாஷிங்டன், டி.சி. (தேசிய பூங்கா), நியூயார்க் நகரம், பாஸ்டன், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அப்போது, ’எங்கள் ஜனநாயகத்தின் மீது கை வைக்காதே’, ‘எங்கள் சமூகப் பாதுகாப்பில் கை வைக்காதே’, ‘வெட்கமற்ற முறையில் ஆட்சியைப் பிடிக்காதே’ போன்ற கோஷங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.