வாஷிங்டன்: அமெரிக்கா தனது குடியேற்றக் கொள்கையில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. இதுவரை மாணவர்கள், கலாசார பரிமாற்ற பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட விசா காலம் நீண்டகாலமாக இருந்த நிலையில், தற்போது அதை குறைக்கும் வகையில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு வழங்கப்படும் எப் விசா (F Visa) அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். இதற்கு முன்பு, கல்வி முடியும் வரை மாணவர்கள் தங்க அனுமதி பெற்றிருந்தனர். புதிய விதிமுறையின்படி, கல்வி காலம் நீண்டிருந்தாலும் விசா நான்கு ஆண்டுகள் முடிந்ததும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
அதேபோல கலாசார பரிமாற்ற பார்வையாளர்களுக்கான ஜே விசா (J Visa) நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இதனால் பரிமாற்ற திட்டங்களில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கான ஐ விசா (I Visa) 240 நாட்களுக்கே வரையறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீன பத்திரிகையாளர்களுக்கு 90 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இது செய்தித்துறை சுதந்திரத்தையும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களின் பணியையும் பாதிக்கும் நிலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அரசு இந்த முடிவை நியாயப்படுத்தும் வகையில், “மாணவர்கள் கல்வி காரணமாக விசா பெற்று வருகிறார்கள். ஆனால் அவர்கள் பலர் கல்வி முடித்தும் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். இதனைத் தடுக்கும் விதமாகவே புதிய கொள்கை அமல்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. தற்போது சுமார் 16 லட்சம் மாணவர்கள் அங்கு கல்வி கற்கிறார்கள். மேலும், 3.5 லட்சம் கலாசார பரிமாற்ற பார்வையாளர்கள் மற்றும் 13,000 பத்திரிகையாளர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், பல மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அடிக்கடி விசா புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பாக இந்திய மாணவர்கள் இதனால் பாதிக்கப்படக்கூடும். இந்தியா அமெரிக்காவுக்கு அதிகமான மாணவர்களை அனுப்பும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பதால், இந்த முடிவு அவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும்.
புதிய விதிமுறைகள் விரைவில் நடைமுறைக்கு வரும் நிலையில், அமெரிக்காவில் கல்வி, பத்திரிகை மற்றும் கலாசார துறைகளில் ஈடுபடும் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.