வங்கதேசத்தில் மாணவர்கள் தலைமையிலான புதிய அரசியல் கட்சி, ராணுவம் அரசியலில் தலையிடுவதாக குற்றஞ்சாட்டி போராட்டத்தில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக டாக்காவில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது நிலைமை மிக மோசமானதாக மாறியதால், ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை நடத்தி வந்த மாணவர்கள், அண்மையில் தேசிய குடிமக்கள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை நிறுவினர். இந்த கட்சி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. தற்போது, இந்த கட்சி வங்கதேச அரசியலில் ராணுவம் தலையிடுவதாக புகார் எழுப்பியுள்ளது.
தேசிய குடிமக்கள் கட்சியின் தலைவர் ஹஸ்னத் அப்துல்லா, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், “ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை, இந்தியாவின் ஆதரவுடன் மறுசீரமைக்கப்பட்ட கட்சியாக மீண்டும் களமிறக்க முயற்சி நடக்கிறது. இது தொடர்பாக கடந்த 11ம் தேதி ராணுவத்தினர் எங்களை அழைத்து பேச்சு நடத்தியது” என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தேசிய குடிமக்கள் கட்சியினர் டாக்கா பல்கலைக்கழகம் வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் போது, கட்சித் தலைவர் ஹஸ்னத் அப்துல்லா பேசும்போது, “ராணுவத்தினர் கன்டோன்மென்ட் பகுதியில் இருந்து மட்டுமே பணியில் ஈடுபட வேண்டும். அரசியலில் தலையிடக் கூடாது. நாட்டுக்குள் சென்று அரசியல் மீதான ஆதிக்கத்தை ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்தால், அதை நாங்கள் எந்தவிதத்திலும் அனுமதிக்க மாட்டோம்” என்று கண்டித்தார்.
மாணவர் போராட்டத்தால் டாக்காவில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ராணுவத்தினர் பல்கலைக்கழகம் மற்றும் பொது இடங்களில் நுழையாமல், டாக்கா நகரின் முக்கிய வீதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேநேரத்தில், வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 2 முதல் 4 வரை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறவுள்ள ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த சந்திப்பில் யூனுஸ், மோடியுடன் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.
‘பிம்ஸ்டெக்’ மாநாடு என்பது இந்தியா, வங்கதேசம், பூட்டான், மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகள் இணைந்து நடத்தும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான மாநாடாகும். இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை.
வங்கதேசத்தின் அரசியல் நிலைமை தற்போது மேலும் மோசமாகும் அபாயம் உள்ளது. மாணவர்கள் கட்சி நடத்தும் போராட்டம், ராணுவத்திடம் இருந்து கடுமையான எதிர்வினை ஏற்படுத்தும் என்பதில் அரசியல் வட்டாரங்கள் அச்சம் காட்டுகின்றன.