பாரீஸ்: பாரீஸ் AI உச்சி மாநாட்டையொட்டி பிரதமர் மோடியை சந்தித்த கூகுள் சிஇஓ, இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் குறித்து பிரதமருடன் விவாதித்ததாக தெரிவித்தார். X சமூக ஊடக தளத்தில் பகிரப்பட்ட பதிவில், “பிரதமர் மோடியை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாரிஸில் AI உச்சிமாநாட்டில் நான் பிரதமரை சந்தித்தேன். AI தொழில்நுட்பம் இந்தியாவிற்கு கொண்டு வரக்கூடிய அற்புதமான வாய்ப்புகள் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்திற்கு கூகுள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை நாங்கள் விவாதித்தோம்.”
முன்னதாக, செயற்கை நுண்ணறிவு மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து பாரிஸ் சென்றார். அன்று இரவு அவருக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் விருந்து அளித்தார். இதைத்தொடர்ந்து 2-வது நாளாக நேற்று நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். அப்போது பிரதமர், “AI தொழில்நுட்பம் வேலைகளை பறிக்காது.
புதிய வகையான வேலை வாய்ப்புகள் உருவாகும். AI தொழில்நுட்பத்தின்படி இளம் தலைமுறையினருக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். உலகில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் AI தொழில்நுட்ப வல்லுநர்கள் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர். நாம் இப்போது AI தொழில்நுட்ப சகாப்தத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம். இந்த தொழில்நுட்பம் மனிதர்களை விட இயந்திரங்களை புத்திசாலியாக மாற்றும் என்று சிலர் பயப்படுகிறார்கள்.
நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் திறவுகோலை நாங்கள் வைத்துள்ளோம். இந்த பொறுப்புணர்வு நம்மை சரியான பாதையில் வழிநடத்தும். பாரிஸைத் தொடர்ந்து AI தொழில்நுட்பம் தொடர்பான அடுத்த சர்வதேச மாநாடு இந்தியாவில் நடைபெறும்” என்றார். சர்வதேச கவனத்தை ஈர்த்த இந்த மாநாட்டையொட்டி பிரதமர் – சுந்தர் பிச்சை சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.