இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர் நிக்கு மதுசூதன் தலைமையிலான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், K2-18b என்ற தொலைதூர கிரகத்தில் வாழ்வதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளனர். விஞ்ஞானி டாக்டர் மதுசூதன் இந்தியாவில் 1980-ல் பிறந்தார். வாரணாசி ஐஐடியில் பி.டெக் பட்டம் பெற்றார். மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி) முதுகலைப் பட்டம் மற்றும் பிஎச்டி படிப்பை முடித்தார்.
சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களின் வளிமண்டலத்தை ஆய்வு செய்தார். 2013-ல், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வானியற்பியல் பேராசிரியராகப் பணியாற்றினார். தொலைவில் உள்ள கோள் 55 கான்கிரி-இ பூமியை விட பெரியது. அதில் நிறைய கார்பன் இருக்கலாம் என்று அவரது ஆராய்ச்சி சுட்டிக்காட்டியது. அவர் தலைமையிலான குழு WASP-19b கிரகத்தில் டைட்டானியம் ஆக்சைடு இருப்பதையும் கண்டுபிடித்தது. 2020-ம் ஆண்டில், அவர்கள் K2-18b கிரகத்தை ஆய்வு செய்து அதன் மேற்பரப்பில் தண்ணீர் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

அவரும் அவரது குழுவினரும் நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பைப் பயன்படுத்தி கே2-18பி கிரகத்தை ஆய்வு செய்தபோது, டைமெத்தில் சல்பைட் மற்றும் டைமெத்தில் டைசல்பைடு வாயுக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். இவை கடலில் உள்ள பாசிகளால் வெளியிடப்படும் வாயுக்கள். இது இந்த கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதை சுட்டிக்காட்டுவதாக டாக்டர் மதுசூதன் தலைமையிலான குழுவினர் தெரிவித்தனர்.