பேங்காக் நகரில், தாய்லாந்து அரசியலை கலக்கிய வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகியது. கம்போடியாவின் முன்னாள் பிரதமரிடம் தொலைபேசியில் பேசியபோது, தன்னுடைய சொந்த நாட்டின் ராணுவ தளபதியை எதிரியாக குறிப்பிட்டதாக பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த உரையாடல் இணையத்தில் கசிந்ததால் நாடு முழுவதும் பெரும் அதிருப்தி நிலவியது.

இந்த விவகாரம் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில், ஜூலை 1 அன்று நீதிமன்றம் பேடோங்டார்னை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து, பொறுப்பு பிரதமராக பும்தம் வெச்சாயாசாயை நியமித்தது. பின்னர் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டபோது, அரசியலமைப்பு மரபை மீறியதாகக் கூறி பேடோங்டார்னை நிரந்தரமாக பதவி நீக்கம் செய்ய உத்தரவிட்டது.
பேடோங்டார்ன் ஷினவத்ரா, வயது 39, பிரதமராகப் பொறுப்பேற்று ஓராண்டு கூட ஆகாத நிலையில், தொலைபேசி உரையாடல் கசிவால் பதவியை இழந்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை பிரச்சனை இந்த சர்ச்சைக்கு காரணமானது. ஹுன் சென் உடனான உரையாடலில் பேசிய கருத்துகளே அவருக்கு அரசியல் வாழ்வில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீர்ப்பால் தாய்லாந்தில் பெரும் அரசியல் அதிர்ச்சி நிலவுகிறது. ஆதரவாளர்கள் நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க, எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. நாடு முழுவதும் அரசியல் குழப்பம் தீவிரமடைந்துள்ள நிலையில், புதிய தலைமை பொறுப்பேற்பது குறித்த ஆலோசனைகள் தொடங்கியுள்ளன. இந்த சம்பவம், அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நாட்டை பற்றி வெளிநாட்டுத் தலைவர்களுடன் பேசும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தை நினைவூட்டுகிறது.