தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த உலக அழகிப்போட்டி வெற்றிகரமாக முடிவடைந்தது. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பல கட்டங்களில் போட்டியிட்டனர். ஆரம்பத்தில் டாப் 40, பின்னர் டாப் 10 மற்றும் டாப் 5 ஆகிய நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தாய்லாந்தைச் சேர்ந்த 21 வயது அழகியான ஒபால் சுச்சாதா உலக அழகிப் பட்டத்தை வென்றார்.

இரண்டாம் இடத்தை எத்தியோப்பியாவின் ஹசத் டெரிஜீ மற்றும் மூன்றாம் இடத்தை போலந்தின் மஜா லஜ்தா வென்றனர். ஒபால் தாய்லாந்தின் புக்கெட் நகரில் பிறந்தவர். அவர் தாய், சீன மற்றும் ஆங்கில மொழிகளில் திறம்பட பேசக்கூடியவர். தற்போது தமாசட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பாடப்பிரிவில் இளங்கலை படித்து வருகிறார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், தனது நாட்டுக்கு உலக அழகிப் பட்டத்தை முதன்முறையாக பெற்றுத் தரும் பெருமை பெற்றுள்ளதாக ஒபால் தெரிவித்தார். 2021ஆம் ஆண்டில் முதல் அழகிப் போட்டிகளில் பங்கேற்ற அவர், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தாய்லாந்து அழகிப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
வெற்றிக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய ஒபால், இந்த வெற்றிக்கு காரணம் பொறுமையும் உறுதிப்பாடும் எனக் கூறினார். தனது மதிப்புகளையும், நம்பிக்கையையும் இழக்காமல் தொடர்ந்ததால்தான் இந்த உயர்வை அடைந்ததாக உணர்வுபூர்வமாக கூறினார்.
இந்தப் பயணத்தில் பல சோதனைகள் இருந்தபோதும், எந்த தருணத்திலும் நம்பிக்கையை விட்டுவிடவில்லை என்றும் அவர் பகிர்ந்தார். ஒருவர் தன்னம்பிக்கையுடன் இருக்கும்போது, இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்பட்டால், ஒரு நாள் வெற்றியை கண்டுகொள்ள முடியும் என்பதே தனது வாழ்நாள் அனுபவம் என கூறினார்.
இவ்வாறு உலக அழகிப் பட்டத்தை வென்று ஒபால் தாய்லாந்தின் பெருமையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.