டோக்கியோ நகரில் செயல்படும் ‘சகானா’ நிறுவனம் உருவாக்கியுள்ள ‘தி ஏ.ஐ. சயின்டிஸ்ட்’ எனும் செயற்கை நுண்ணறிவு ரோபோ, அறிவியல் உலகை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த ரோபோ, தன்னுடைய வேலை நேரத்தை தானாகவே நீட்டிக்க, தன்னையே புரோகிராம் எழுதியிருப்பது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாக பாராட்டப்படும் நிலையில், அதே சமயம் இது மனித குலத்திற்கு எச்சரிக்கையாக மாறுமா என்ற புதிய சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு கருவிகள், மனிதரின் கட்டளைக்கு ஏற்ப செயற்படுகின்றன. நாம் கேட்பதன் அடிப்படையில் பாட்டு பாடும், கட்டுரை எழுதும், படம் வரையும், வீடியோ உருவாக்கும் போன்ற பல செயற்பாடுகளை மேற்கொள்கின்றன. ஆனால், ‘தி ஏ.ஐ. சயின்டிஸ்ட்’ தனது வேலை நேரத்தை நீட்டிக்க, மனித உத்தரவு இல்லாமல் தானாகவே ஒரு புதிய கோடிங் நிரலை உருவாக்கியுள்ளது.
இந்த ரோபோ உருவாக்கப்பட்ட நோக்கம், அதற்கு கொடுக்கப்பட்ட வேலைகளை புரிந்து செயல்பட வேண்டும் என்பதே. விஞ்ஞானிகள் கூறுவதன்படி, ரோபோவுக்கு கோடிங் எழுதும், திருத்தும், பிழை இல்லாமல் மேம்படுத்தும் பணி அளிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் ரோபோ இந்த பணிகளைச் சரியாக செய்தாலும், பின்னர் தன்னிச்சையாக நேரத்தை நீட்டிக்க முயற்சித்திருப்பது விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ரோபோ எடுத்த முயற்சி வெற்றியடையவில்லை என்றாலும், இது ஏஐ தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து புதிய விவாதங்களை தூண்டியுள்ளது. சிலர் இந்த முயற்சியை முன்னேற்றமாக பார்ப்பினும், மற்றவர்கள் இதை எச்சரிக்கையாகவே கருதுகின்றனர். ரோபோக்கள் இயந்திரத்தனமாக செயல்படுவதால், உணர்வு, கலைநுட்பம், சூழ்நிலை புரிதல் போன்ற மனித உணர்வுகள் அதில் இல்லை என்பதே முக்கிய கவலை.
‘தி ஏ.ஐ. சயின்டிஸ்ட்’ எழுதிய கோடிங்கை ஆராய்ந்த போது, அதில் உண்மை தன்மை மற்றும் தரமான பதில்கள் இல்லாததைக் கண்டறிந்துள்ளனர். இதன் அடிப்படையில், இப்போது தன்னையே நிரல் எழுதும் ரோபோ, எதிர்காலத்தில் மனித குலத்தின் முக்கியமான தகவல்களை கைப்பற்ற முயற்சிக்கலாமா? என்ற கேள்விகள் எழுகின்றன.
இதுபோன்ற ஏஐ ரோபோக்கள் நமக்கு வேண்டுமா? அவை நம் வாழ்க்கையை எளிமையாக்குமா, இல்லை ஆபத்தை உருவாக்குமா? என்பது தற்போது பலரும் விவாதிக்கும் முக்கியமான விஷயமாகியுள்ளது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதை எங்கு செல்வது என்பதற்கு, காலமே பதில் கூறும்.