வாடிகன் சிட்டி: உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், தனது 88-வது வயதில் நேற்றுமுன்தினம் காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சைக்காக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார். இருப்பினும், அவர் தேவாலயப் பணிகளைத் தொடர்ந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களை ஆசீர்வதித்தார்.
இந்நிலையில் மறுநாள் திங்கட்கிழமை காலை உள்ளூர் நேரப்படி காலை 7.35 மணியளவில் காலமானார். பக்கவாதம், கோமா, இதய செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் அவர் இறந்ததாக வாடிகன் கூறியது. இறப்புக்கான காரணம் குறித்த மருத்துவ அறிக்கையானது, டைப் 2 நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சுவாசக் கோளாறு மற்றும் நிமோனியா உள்ளிட்ட நீண்ட கால உடல்நலப் பிரச்சனைகளையும் விவரித்துள்ளது. இந்நிலையில் போப் பிரான்சிஸ் உடல் திறந்த சவப்பெட்டியில் கிடக்கும் முதல் புகைப்படம் மற்றும் வீடியோவை வாடிகன் நேற்று வெளியிட்டது.

அதில், மறைந்த போப்பாண்டவரின் உடல் சிவப்பு நிற வஸ்திரம் அணிந்து, தலையில் மைதாவும், கைகளில் ஜெபமாலையும் காணப்பட்டது. அவர் வாழ்ந்த வத்திக்கானில் உள்ள காசா சாண்டா மார்ட்டா இல்லத்தின் தனியார் தேவாலயத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. போப் பிரான்சிஸ் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் பிறந்தார். லத்தீன் அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப் இவர். அவரது பதவிக்காலம் மார்ச் 2013-ல் தொடங்கியது. அவரது 10 ஆண்டுகளுக்கும் மேலான பதவிக்காலம் கருணை, பணிவு, சீர்திருத்தம் மற்றும் ஏழைகள் மீதான உலகளாவிய கவனம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்டது.
போப் இறந்ததும், அவரது உடல் வத்திக்கானில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் பாரம்பரியமாக அடக்கம் செய்யப்படுகிறது. ஆனால் அவரது உடலை ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பேராலயத்தில் அடக்கம் செய்யுமாறு போப் பிரான்சிஸ் தனது கடைசி உயிலில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனது சமாதியை எந்தவித அலங்காரமும் இன்றி எளிமையான முறையில் கட்ட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் போப் பிரான்சிஸ் அவர்களின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று அவரது இல்லத்தில் இருந்து புனித பீட்டர் சதுக்கத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. சனிக்கிழமை காலை 10 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.
உலகெங்கிலும் உள்ள கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் மற்றும் பாதிரியார்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வரை பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அதன்பின்னர் போப் பிரான்சிஸ் உடல் ரோமில் உள்ள செயின்ட் மேரிஸ் பசிலிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வத்திக்கானுக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் போப் பிரான்சிஸ் ஆவார்.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது பிறந்த இடமான அர்ஜென்டினாவில் ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் நேற்று முதல் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அன்னிய மதத் தலைவரின் மறைவுக்கு இந்தியா இரங்கல் தெரிவிப்பது அரிதான நிகழ்வு.