ஜப்பான் நாட்டில் நகயாமா சான் மற்றும் சாசிகோ சான் என்ற ஒரு தம்பதி இந்திய கலாச்சாரத்தின் மீது மிகுந்த அன்புடன் ‘Indian Spice Factory’ என்ற இந்திய உணவகத்தை நடத்துகிறார்கள். இந்த உணவகம் ஜப்பான் நாட்டின் கசுகா, ஃபுகோக்கா பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பாரம்பரிய தென்னிந்திய முறையில் வாழை இலைகளில் உணவுகளை பரிமாறுவது வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. உணவகத்தின் சுவர் அலங்காரங்கள், இந்திய இசைக்கருவிகள் மற்றும் பாரம்பரிய கலைப்பொருட்கள் இந்திய பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன.
இந்த உணவகத்தில் பெங்காலி மற்றும் தென்னிந்திய உணவுகள், பீர்னி, முறுக்கு போன்ற சுவையான உணவுகள் கிடைக்கின்றன. சாசிகோ சான் தினமும் பாரம்பரிய இந்திய ஆடை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு அன்புடன் சேவை செய்வதும் இந்த உணவகத்தின் சிறப்பம்சமாகும். இந்த தம்பதிகளின் இந்திய உணவிற்கும் கலாச்சாரத்திற்கான மரியாதை மற்றும் ஆர்வம் இதை தனிப்பட்டதாக மாற்றுகிறது.
நகயாமா சான் இந்தியாவில் கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களில் ஐந்து ஆண்டுகள் ஜப்பானிய உணவகங்களை நடத்தி இந்திய உணவு, கலாசாரம் மற்றும் மக்களின் அன்பை அனுபவித்தவர். இதுவே அவருக்கு இந்திய உணவகத்தை ஜப்பானில் தொடங்க ஊக்கமாக இருந்தது. சமீபத்தில் இந்த உணவகத்தின் அனுபவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் இந்திய கலாச்சாரம் மற்ற நாடுகளிலும் எவ்வாறு நேசிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
‘Indian Spice Factory’ உணவகம் இந்திய மற்றும் ஜப்பானிய மக்களை உணவின் வழி இணைக்கும் ஒரு சிறந்த இடமாக இருக்கிறது. உணவு என்பது சுவைக்கான அனுபவமே அல்லாமல், கலாச்சாரம், வரலாறு, மற்றும் வாழ்வியலின் பிரதிபலிப்பாகும் என்பதை இந்த உணவகம் நன்கறிந்துள்ளது. இந்த ஜப்பானிய தம்பதியின் இந்திய உணவகம் உலகம் முழுவதும் இந்திய உணவின் மற்றும் பண்பாட்டின் பிரபலம் பெருக்க உதவுகிறது.