வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியேறும் அனைத்து வெளிநாட்டினரும், தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆவணங்களை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும் என்ற புதிய விதியை டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து நீங்கியிருந்த நிலையை மாற்றி மீண்டும் கடுமையாக அமுல்படுத்தப்படுகின்றது.

அமெரிக்காவில் வெளிநாட்டினரின் வருகையை பதிவு செய்யும் நோக்கில் 1940ம் ஆண்டு ‘ஏலியன் பதிவு சட்டம்’ உருவாக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் விலகப்பட்டது. தற்போது, சட்டவிரோத குடியேறலை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தச் சட்டம் மீண்டும் உயிர் பெறுகிறது.
இதன்படி, கடந்த 11ம் தேதிக்குப் பிறகு அமெரிக்காவுக்குள் நுழையும் மற்றும் 30 நாட்களுக்கும் மேலாக தங்க விரும்பும் வெளிநாட்டினர்கள், ‘ஜி325ஆர்’ என்ற விண்ணப்பம் மூலம் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு பெற்றோர் பதிவு செய்ய வேண்டும்.
இந்த பதிவு செய்யத் தவறினால் அபராதம், சிறைத் தண்டனை விதிக்கப்படும். வீட்டு முகவரி மாற்றம் 10 நாட்களில் பதிவு செய்யப்படவில்லை எனில் சுமார் 4 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 14 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களின் கைரேகை மற்றும் விவரங்களை 30 நாட்களில் பதிவு செய்ய வேண்டும்.
வேலை, கல்வி விசா அல்லது கிரீன் கார்டு வைத்துள்ளவர்கள் இந்தப் பதிவிலிருந்து விலக்கப்படுவர். இருந்தாலும் அவர்கள் எங்கு சென்றாலும் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். பதிவு செய்ததற்கான ஆவணங்கள் இல்லாமல் சுற்றிப்பார்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என அமெரிக்க உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.