கான்பெராவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மத்திய திபெத்திய நிர்வாகத்தின் தலைவர் சிக்யோங் பென்பா செரிங், தற்போது பதவி வகிக்கின்ற 14வது தலாய் லாமா தனது 90வது பிறந்தநாளையொட்டி, அடுத்த தலாய் லாமா குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடக்கூடும் எனத் தெரிவித்தார். வருகிற ஜூலை மாதம் இந்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 89 வயதாகியுள்ள தலாய் லாமா, முந்தைய பேச்சுகளில், தன்னுடன் பிறந்ததிலிருந்து தொடர்ந்துவந்த திபெத்திய பவுத்த மதத்தை வழிநடத்தப் போகும் அடுத்த தலைமுறை குறித்து தானே முடிவு செய்யப்போவதாக குறிப்பிட்டிருந்தார்.

திபெத் நாடு 1959ம் ஆண்டிலிருந்து சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பது அனைவரும் அறிந்ததே. அப்போது சிறுவயதில் இருந்த தலாய் லாமா, சீனாவின் அரசியல் அழுத்தத்தால் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவருடன் பல லட்சம் திபெத்தியர்களும் இந்தியாவிற்கு வந்து, தற்போது வரை தங்கள் பாரம்பரியத்தையும் மத மரபுகளையும் பாதுகாத்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். சீன ஆட்சியை அவர்கள் இன்னும் ஏற்கவில்லை.
இந்தியாவில் திபெத்தியர்கள் தங்களுக்கென நாடு கடந்த அரசாங்கத்தை அமைத்து செயல்பட்டு வருகின்றனர். தலாய் லாமா தற்போது உலகளவில் மத தலைவராக மட்டுமல்ல, அமைதியின் பிரதிநிதியாகவும் போற்றப்படுகிறார். ஜூலை 6ம் தேதி அவர் 90வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த விழாவில், அவரது பதவிக்குப் பிறகு வழிநடத்தப்போவதற்கான அடுத்த தலாய் லாமா குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் திபெத் மத்திய நிர்வாக தலைவர் பென்பா செரிங் உறுதிப்படுத்தினார். அவரின் சொற்பொழிவில், இந்திய அரசு சார்பாக ஒரு முக்கிய பிரதிநிதி இந்த பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்த விழா ஜூலை 6ம் தேதி துவங்கி ஒரு வருடம் நடைபெறவிருக்கிறது.
இதற்கு முன்னதாக, ஜூலை 2 முதல் 4 வரை தர்மசாலாவில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளில், திபெத்திய பவுத்த மதத்தின் அனைத்து பிரிவுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்த சந்திப்புகளில் தலாய் லாமா நேரடியாக கலந்துகொண்டு, அடுத்த தலைமுறை பற்றிய ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளார்.
அடுத்த தலாய் லாமா குறித்து வெளிவரும் அறிவிப்பு, திபெத் மற்றும் சீனாவிலேயே அல்லாமல், உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, சீனா தனது வரலாற்று பாரம்பரியத்தில் தலாய் லாமா தேர்வில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், இந்த முடிவு ஒரு முக்கிய நிலைப்பாட்டை காட்டும்.
திபெத்திய மக்களும், பவுத்த மதத்தை நம்பும் உலக மக்களும், தலாய் லாமா எடுத்த முடிவை மதிக்கத் தயாராக உள்ளனர். இந்த நிகழ்வு, திபெத்திய பாரம்பரியத்தின் தொடர்ச்சிக்கும், அதன் அடையாளத்திற்கும் ஒரு முக்கிய கட்டமாக அமையலாம் என நம்பப்படுகிறது.