ஒட்டாவா: அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடா பிரதமர் மார்க் கார்னி, “அமெரிக்க வரிகள் நியாயமற்றவை. அவை ஏற்கனவே உள்ள வர்த்தக ஒப்பந்தங்களை மீறுகின்றன. அமெரிக்காவுடனான பழைய உறவு முடிவுக்கு வந்துள்ளது” என்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆட்டோ இறக்குமதிக்கு 25 சதவீத வரியை அறிவித்துள்ளார், இது அடுத்த வாரம் அமலுக்கு வரும். கனடா பொருட்களுக்கு 25 சதவீத வரியையும், சீன பொருட்களுக்கு 10 சதவீத வரியையும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதிக வரிகள் அமெரிக்காவுடனான உறவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. “அமெரிக்கா இனி நம்பகமான கூட்டாளி அல்ல. பேச்சுவார்த்தைகள் மூலம் சில நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்” என்று மார்க் கார்னி கூறினார். “கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஆழமான பொருளாதார, பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது” என்றும் அவர் கூறினார்.
ஏப்ரல் 2 முதல் தனது பொருட்களுக்கு அதிக வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கனடாவை பலவீனப்படுத்தவும், அதை சோர்வடையச் செய்யவும் அமெரிக்கா பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கார்னி கூறினார். இது சம்பந்தமாக, “இந்த முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம். அது ஒருபோதும் நடக்காது. சமீபத்திய வரிகளுக்கு எதிராக நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்” என்றார்.