தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியா, 1990ம் ஆண்டு வரை நீடித்த உள்நாட்டு போரால் பெரும் நாசத்தை சந்தித்தது. அந்தக் காலத்தில் நாட்டின் 25 மாகாணங்களிலும் ஏராளமான கண்ணிவெடிகள் மற்றும் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டிருந்தன. இதன் விளைவாக, தவறுதலாக அதனை மிதித்த பலர் உயிரிழந்துள்ளனர். 1992ம் ஆண்டிலிருந்து இந்தக் கண்ணிவெடிகளை கண்டறிந்து அகற்றும் வேலைகள் தொடங்கப்பட்டன. இதுவரை 11 லட்சம் கண்ணிவெடிகளும், 29 லட்சம் வெடிகுண்டுகளும் அகற்றப்பட்டுள்ளன.
இன்னும் சுமார் 1,970 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வெடிகுண்டுகள் புதைந்திருப்பதாக கம்போடியாவின் கண்ணிவெடி கண்டறிதல் மற்றும் பாதிக்கப்பட்டோர் உதவி ஆணையம் தெரிவித்துள்ளது. ஆரம்ப காலத்தில் இந்த பணிக்காக மோப்ப நாய்கள் பயிற்றப்பட்டன. ஆனால் சமீப காலமாக ஆப்ரிக்கா வம்சாவளியை சேர்ந்த பெரிய எலிகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
இந்த எலிகள் சுமார் 1.5 அடி நீளமும், 1.5 கிலோ எடையுடன் வளரக்கூடியவை. அவை மிகவும் புத்திசாலிகள் என்பதோடு, பயிற்சியை எளிதாக ஏற்கக்கூடியவை. கண்ணிவெடிகள் மட்டுமின்றி, காசநோய் உள்ளிட்ட சில தொற்றுநோய்களையும் துல்லியமாக கண்டறிய முடியும் என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம், இந்த எலிகள் மனித வாழ்வை காப்பாற்றும் பணி செய்துவருகின்றன.
கம்போடிய ராணுவம் இந்த எலிகளை, நாய்களைப் போல் கழுத்துப்பட்டை அணிவிக்கிறது. பிறகு, வெடிகுண்டுகள் இருக்கக்கூடிய பகுதிகளில் இவற்றை அனுப்புகின்றனர். கண்ணிவெடிக்கு அருகே வந்தவுடன், இந்த எலி வேகமாக அந்த இடத்திலிருந்து விலகிச் செல்லும். இதைக் குறியாகக் கொண்டு ராணுவம் அந்த வெடிகுண்டுகளை பாதுகாப்பாக அகற்றுகிறது. இதுவரை எந்தவொரு தவறும் இவை செய்யவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.