வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். “உக்ரைன் உடனான போர் ஒரு வாரத்தில் முடிவடைய வேண்டிய ஒன்று. ஆனால் அது நான்கு ஆண்டுகளாக நீடிப்பது புடினின் மிகப்பெரிய தவறு,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேயுடன் நடந்த சந்திப்புக்குப் பின் டிரம்ப் கூறியதாவது: “புடினுடன் எனக்கு நல்ல உறவு இருந்தது. ஆனால் அவர் ஏன் இந்தப் போரைத் தொடர்ந்து நடத்துகிறார் என்பது புரியவில்லை. இந்தப் போர் அவருக்கே மிகப்பெரிய இழப்பாக முடிந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இத்தனை பெரிய உயிரிழப்பு நடந்தது இல்லை,” எனக் குறிப்பிட்டார்.
அதே சமயம், “என் ஆட்சிக் காலத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் உட்பட பல போர்களை நான் முடிவுக்குக் கொண்டு வந்தேன். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான இந்த மோதலையும் முடிவுக்கு கொண்டுவரும் திறன் எனக்கே உண்டு,” என்று டிரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், சீனா அமெரிக்காவுடன் பொருளாதார பிளவை ஏற்படுத்த முயற்சி செய்கிறது என்றும், அது அமெரிக்க விவசாயிகளை பாதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
டிரம்பின் இந்தக் கருத்துகள், புடினை நேரடியாக விமர்சிக்கும் வகையில் வெளிவந்துள்ளதால், சர்வதேச அரசியல் வட்டாரங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முயற்சிகள் குறித்து வெள்ளை மாளிகை எந்த விளக்கமும் வழங்கவில்லை.