குய்சோ: சீனாவின் குய்சோ மாகாணத்தில் கட்டப்பட்ட இந்தப் பாலம் நேற்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. இந்தப் பாலம் ஹுவாஜியாங் கிராண்ட் கன்யான் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 625 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்தப் பாலம் இரண்டு மலைகளை இணைப்பதில் மிகவும் அழகாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் உள்ளது.
இதுவரை, இந்தப் பகுதியைக் கடக்க 2 மணிநேரம் ஆனது, ஆனால் இப்போது பாலத்தின் உதவியுடன், அதை 2 நிமிடங்களில் கடக்க முடியும். முன்னதாக, தரை மட்டத்திலிருந்து 565 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட பெய்பன்ஜியாங்கில் உள்ள பாலம், உலகின் மிக உயரமான பாலமாக இருந்தது. இப்போது, ஹுவாஜியாங் கிராண்ட் கன்யான் பாலம் 625 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு, அந்த சாதனையை முறியடித்துள்ளது. 2,900 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம் 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

குய்சோ மாகாண போக்குவரத்து முதலீட்டுக் குழுவின் திட்ட மேலாளர் வூ ஜாவோமிங் கூறுகையில், “625 மீட்டர் உயரமுள்ள இந்தப் பாலம் ஒரு பொறியியல் அற்புதம். பொதுமக்கள் இந்தப் பாலத்தைப் பார்ப்பதற்கு வசதியாக 207 மீட்டர் உயரத்தில் ஒரு லிஃப்ட் நிறுவப்பட்டுள்ளது.
கூடுதலாக, பாலத்தைப் பொதுமக்கள் பார்ப்பதற்காக பாலத்தின் குறுக்கே உணவகங்கள் மற்றும் தளங்கள் நிறுவப்பட்டுள்ளன. இது விரைவாக ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறியுள்ளது, மேலும் “இது நிறைய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்” என்று அவர் கூறுகிறார்.