வாஷிங்டன்: கடந்த 21-ம் தேதி அன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அதிபரும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான ஜோ பைடன் அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் அதற்கான காரணத்தை நாட்டு மக்களிடம் அவர் விளக்கியுள்ளார்.
“ஜனநாயகத்தை பாதுகாப்பது அனைத்தையும் விட முக்கியமானது. அதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும். இதற்கு எதுவும் தடையாக இருக்க முடியாது. அதில் தனிப்பட்ட காரணமும் அடங்கும். நான் இந்த பொறுப்பை மதிக்கிறேன். அதை விட தேசத்தை அதிகம் நேசிக்கிறேன். இதன் மூலம் ஜனநாயகக் கட்சியை ஒன்றிணைக்க விரும்புகிறேன். அமெரிக்க அதிபராக எனது செயல்பாடு, உலக அளவிலான தலைமைத்துவம் மற்றும் அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான எனது பார்வை போன்றவற்றை எடுத்துக் கொண்டால் இரண்டாவது முறையாக நான் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதி உள்ளது.
அமெரிக்க மக்களுக்காக பணியாற்றுவதில் நான் பலம் கொள்கிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், ஜனநாயகத்தை காக்க இந்த முடிவை எடுத்துள்ளேன். அடுத்த ஆறு மாதங்கள் அதிபராக எனது பணியை செய்வேன். புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பது தான் சிறந்த வழி. இளம் தலைமுறையினர் நாட்டை ஒன்றிணைக்கும் அந்த பணியை சீரான முறையில் செய்வார்கள் என நம்புகிறேன். இங்கு சர்வாதிகாரிகள் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது. மக்கள்தான் ஆட்சியாளர்கள். அதிகாரம் மக்கள் கையில் உள்ளது.
துணை அதிபர் கமலா ஹாரிஸ் திறன் கொண்டவர். அனுபவமும் பெற்றவர். நம் நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவராக பணியாற்றி உள்ளார். இப்போது சாய்ஸ் அமெரிக்க மக்களிடம் உள்ளது. பொது வாழ்க்கையில் அனுபவம் கொண்டவர்களுக்கு எப்போதும் இடம் உண்டு. அதே நேரத்தில் இளம் தலைமுறையினருக்கும் இங்கு வாய்ப்பு உண்டு” என பைடன் தனது உரையில் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனவரி 20, 2025-ம் ஆண்டு வரையில் அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பில் இருப்பார். இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில், வியட்நாம் போரின் தாக்கத்தால் 1968-ல் தேர்தலில் போட்டியிடாமல் லிண்டன் ஜான்சன் விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.