வாஷிங்டன்:அமெரிக்காவில் பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் தலைமையிலான புதிய அரசு, வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அமெரிக்கர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் நம் நாட்டுக்கு தப்பிச் சென்றார்.
நடந்த வன்முறை சம்பவங்களில் இந்து கோவில்கள் தாக்கப்பட்டதுடன் இந்துக்களும் தாக்கப்பட்டனர். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இடைக்கால அரசை வலியுறுத்தியது.
சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் 47வது அதிபராக அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க டிரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய-அமெரிக்கர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து இந்திய அமெரிக்கரான டாக்டர் பாரத் பராய் கூறியதாவது: அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தைரியமானவர். வங்கதேசத்தில் இந்து கோவில்கள் மற்றும் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்ப் தலைமையிலான புதிய அரசு வங்கதேசத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
இதுகுறித்து அமெரிக்க எம்.பி.க்களை சந்தித்து வலியுறுத்துவோம். டிரம்ப் நிர்வாகம் தடைகள் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய அமெரிக்கர்கள் கூறுகின்றனர்.
வங்கதேசம் ஆடை ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ளது. இதை தடை செய்தால் அந்த நாட்டு மக்களின் கதி என்ன? வங்கதேச ராணுவம் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை கட்டுப்படுத்துகிறது. மேலும், நாட்டில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால், இந்திய அரசும் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றார்.