ஜெய்பூரில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டில், டிஆர்டிஓ விருந்தினர் மாளிகை ஒப்பந்த மேலாளர் மகேந்திர பிரசாத் (32) கைது செய்யப்பட்டார். இவர் உத்தரகாண்டின் பால்யூன் பகுதியைச் சேர்ந்தவர். ஜெய்சால்மர் சந்தன் பீல்ட் துப்பாக்கிச்சூடு மையம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் பணியாற்றி வந்த இவர், சமூக ஊடகங்கள் மூலம் ரகசிய தகவல்களை பகிர்ந்ததாக சந்தேகம் எழுந்தது.
உளவுத்துறையினர் ரகசிய கண்காணிப்பில், ஏவுகணை மற்றும் ஆயுத சோதனைகளுக்காக துப்பாக்கிச்சூடு மையம் வரும் டிஆர்டிஓ விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள் தொடர்பான தகவல்களை ஐஎஸ்ஐக்கு அனுப்பியதை கண்டறிந்தனர். பின்னர், ஜெய்பூரில் உள்ள மத்திய புலனாய்வு மையத்தில் வைத்து அவரை விசாரணை செய்தனர். அவரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தொழில்நுட்ப ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில், இந்திய ராணுவம் மற்றும் டிஆர்டிஓ தொடர்பான முக்கிய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதும், உளவு வேலை பார்த்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மகேந்திர பிரசாத் கைது செய்யப்பட்டார்.
ஜெய்பூர் சிஐடி இன்ஸ்பெக்டர் விஷ்ணுகாந்த், “மகேந்திர பிரசாத் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முழுமையான விசாரணை நடத்தப்படும். அடுத்த கட்ட விசாரணை தொடரும்” என்றார்.