வாஷிங்டன்: உக்ரைன் போருக்கு முடிவு காண்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, “ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினை ஹங்கேரியில் நேரில் சந்திக்கிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “இதுவரை எட்டு போர்களை நிறுத்தியுள்ளேன். அதில் ஒன்பதாவது முடிவையும் காண விரும்புகிறேன். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரில் அமைதிக்கான வாய்ப்பு உருவாகி வருகிறது” என்றார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ விரைவில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்திக்க இருப்பதாகவும், அதற்கு முன் தான் புடினுடன் தொலைபேசியில் பேசியதாகவும் டிரம்ப் கூறினார். “மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தியதற்காக புடின் எனக்கு பாராட்டு தெரிவித்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்தித்து, போர்நிலை குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா–ரஷ்யா உறவுகள் குறித்தும் அவர் பேசியபோது, “இந்த சந்திப்பில் வர்த்தக ஒப்பந்தங்களும் விவாதிக்கப்படும். போர் முடிந்த பிறகு ரஷ்யாவுடன் புதிய வர்த்தக பிணைப்பை உருவாக்குவோம். ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற உள்ள இந்த சந்திப்பு உலக அமைதிக்கான முக்கியமான திருப்புமுனையாக இருக்கும்” என டிரம்ப் கூறினார்.
இந்நிலையில், புடின் மற்றும் டிரம்ப் சந்திப்பை உலகம் முழுவதும் அரசியல் வட்டாரங்கள் கவனித்துக் கொண்டுள்ளன. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த சந்திப்பு உலக அரசியலின் போக்கை மாற்றக்கூடியதாக அமையும் என சர்வதேச நிபுணர்கள் கருதுகின்றனர்.