ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் சந்தித்து பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான மோதல் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், போர் நிறுத்த முயற்சிகளில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த ஆகஸ்டில் அலாஸ்காவில் இரு தலைவர்கள் பேசியிருந்தாலும், அதில் பெரும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

சமீபத்திய சமூக ஊடக பதிவில் டிரம்ப், “புடினுடன் தொலைபேசியில் பயனுள்ள உரையாடல் நடந்தது; இது போரை முடிவுக்குக் கொண்டு வர ஒரு முக்கிய முன்னேற்றம்,” என தெரிவித்துள்ளார். அவர் விரைவில் ஹங்கேரியில் புடினை நேரில் சந்திக்கவுள்ளார்; தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறினார்.
புடினை சந்தித்த பின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் வெள்ளை மாளிகையில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்தச் சந்திப்பில் ஏவுகணை உதவி மற்றும் போர் நிறுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.