வாஷிங்டன்: இந்தியா–அமெரிக்கா உறவுகள் வரி விதிப்பு விவகாரத்தால் சற்றே பதற்றத்தில் இருக்கும் நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கான புதிய தூதராக செர்ஜியோ கோரை நியமித்து உள்ளார். இது இருநாடுகளுக்கிடையே நிலவிய உறவுகளில் ஏற்பட்ட விரிசலுக்கு சமாதான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், “செர்ஜியோ கோரை இந்தியாவுக்கான தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்பு தூதராகவும் நியமிக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் வெள்ளை மாளிகையில் பணியாற்றும் மிக விசுவாசமான நபர். பல ஆண்டுகளாக எனது அணியில் இருந்தவர், தேர்தல் பிரசாரங்களில் முக்கிய பங்கு வகித்தவர்,” என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள வரி சூழ்நிலை, இருநாடுகளின் இடையேயான வர்த்தக உறவுகளை பாதித்தது. இதனைச் சூழ்நிலையை சமாளிக்கவும், இருநாட்டினிடையே இரு தரப்புகளுக்கும் நம்பிக்கையுடன் செயல்படக்கூடிய தூதர் தேவை என்பதற்கேற்ப, செர்ஜியோ கோர் தேர்வானதாக கூறப்படுகிறது.
58 வயதான செர்ஜியோ கோர், தற்போது வெள்ளை மாளிகையில் பணியாளர் அலுவலக இயக்குநராக பணியாற்றி வருகிறார். அவர் பதவியேற்கும் வரை அதேப் பொறுப்பில் நீடிக்க உள்ளார். “அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றும் பணியில், நம்பகமான ஒருவர் தூதராக இருப்பது எனக்கு மிகவும் முக்கியம். செர்ஜியோ அந்த நபர் தான்” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.