அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் அலாஸ்காவில் சந்தித்தது உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. புதின் தனது சிறப்பு விமானத்தில் அலாஸ்கா வந்தபோது, டிரம்ப் சிவப்பு கம்பள வரவேற்பளித்தார். இருவரும் ஒரே காரில் நட்பான சூழலில் உரையாடியபடி சென்றனர்.

மூன்று மணிநேரம் மூடிய கதவுகளுக்குள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பிலும் அதிகாரிகள் பங்கேற்றனர். சந்திப்பு முடிந்தபின் பத்திரிகையாளர்களை சந்தித்த இருவரும், “சமாதானத்தை தொடர்வோம்” என்ற பின்னணியில் பேசியது முக்கிய அம்சமாக இருந்தது. புதின், போரின் முதன்மை பிரச்சனை நாட்டோவில் உக்ரைன் இணைவது என வலியுறுத்தினார். இதற்கு தீர்வு தேவை என்றும் குறிப்பிட்டார்.
டிரம்ப், சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தாலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். விரைவில் மீண்டும் சந்திப்போம் என்றும் கூறினார். அதற்கு புதின், “அடுத்த முறை மாஸ்கோவில்” என்று பதிலளித்தார். செய்தியாளர்கள் கேள்விகளை கேட்க முயன்றபோது பதில் அளிக்காமல் இருவரும் வெளியேறினர்.
பின்னர் டிரம்ப், உக்ரைனின் ஒத்துழைப்பே எந்த ஒப்பந்தத்திற்கும் முக்கியம் எனக் கூறினார். உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புடன் கவனிக்கப்பட்ட இந்த சந்திப்பில் முடிவு எதுவும் எட்டப்படாததால், அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது பெரும் கேள்வியாகியுள்ளது.