அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு நண்பர்களாக இருந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் தற்போது எதிரிகளாக மாறியுள்ளனர். ட்விட்டரை எக்ஸ் என்ற பெயரில் எலான் மஸ்க் வாங்கியபோது, டிரம்பின் கணக்கை மீண்டும் செயல்படுத்தினார். இதன் பின்னர், தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக எலான் செயல்பட்டார். ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர்களது நட்பு முறிந்துவிட்டது.

டிரம்ப், அரசு செலவுகளை குறைப்பதற்காக எலான் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்த விரும்புவதாக அறிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த எலான், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வழங்கும் டிராகன் விண்கல சேவையை நிறுத்துவதாக மிரட்டினார். தற்போதைய நிலையில், அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல டிராகன் விண்கலமே முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டால், அமெரிக்கா ரஷ்யாவின் சூயஸ் விண்கலத்தை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆனால் அதில் ஒரே நேரத்தில் மூன்று பேரையே அனுப்ப முடியும். இதனால் விண்வெளி திட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படும். இந்நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில், ஒரு பயனரின் கோரிக்கைக்கு பதிலளிக்கையில் டிராகன் சேவையை தொடருவதாக தெரிவித்தார்.
இருவரின் மோதல் காரணமாக, எலான் மஸ்க்கின் டெஸ்லா பங்குகள் கடுமையாக வீழ்ந்துள்ளன. இதன் விளைவாக, அவரது சொத்து மதிப்பு 2.80 லட்சம் கோடி ரூபாய்க்கு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலை தொடர்ந்து இருந்தால், விண்வெளி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.