இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கே கூடுதல் வரி விதிப்பது, குடியுரிமை கொள்கையில் கடுமையான மாற்றங்களை கொண்டு வருவது போன்ற அவரது நடவடிக்கைகள் பல நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அந்த வரிசையில், கல்வி நிறுவனங்கள் மீதும் அவர் கவனம் செலுத்த தொடங்கினார். தன் கொள்கைகளுக்கு அமைவாக கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்ற அவர் எண்ணம், பல பல்கலைக்கழகங்களை கட்டாயமாக அவரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. எனினும், இந்த போக்குக்கு எதிராக பழமையான மற்றும் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலை நின்றது.
மாணவர்கள் சேர்க்கை முறைகள், பல்கலை வளாகங்களில் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் ஆகியவற்றில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தினார். இவற்றை ஏற்க மறுத்த ஹார்வர்டு பல்கலை மீது, டிரம்ப் கடும் நடவடிக்கையெடுத்து, பல்கலைக்கு வழங்கப்பட்ட 2.2 பில்லியன் டாலர் நிதியை நிறுத்தினார். இந்திய மதிப்பில் இது சுமார் 18,858 கோடி ரூபாய் ஆகும்.
இந்த நடவடிக்கை, ஹார்வர்டு மட்டும் இல்லாமல், உலகளாவிய கல்வி மற்றும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஏனெனில், இந்த பல்கலையில் உலகின் பல நாடுகளிலிருந்து மாணவர்கள் படித்து வருகிறார்கள். நிதி நிறுத்தம், இந்த மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றும் நிலை ஏற்படுத்தியது.
இதனுடன், சர்வதேச மாணவர்கள் மற்றும் அவர்களது விசா நிலை குறித்த விவரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என உள்நாட்டு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்தது. இல்லையெனில், ஹார்வர்டு பல்கலை, வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் அனுமதியை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை தொடர்ந்து அனுமதிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அந்தஸ்து நீக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்கலை வளாகங்களில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள், அவரது நிர்வாகத்தால் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளாகவே கருதப்பட்டுள்ளன.
இந்தநிலையில், விசா காலத்தை மீறியவர்களை நாடு கடத்துவது, சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படுகின்றன. ஆனால் இவை, இஸ்ரேலை திருப்திப்படுத்தும் வகையிலும், அமெரிக்காவில் செல்வாக்கு மிக்க யூதர் குழுக்களின் ஆதரவைப் பெறும் நோக்கிலும் மேற்கொள்ளப்படுவதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியமான விஷயம் தான். ஆனால், கல்வி நிறுவனங்களின் சுதந்திரத்தையும், சர்வதேச மாணவர்களின் கல்வி உரிமையையும் பாதிக்கும் விதமாக செயல்படுவது கேள்விக்குரியது.
இந்தப் பிரச்னை, மிரட்டல் அல்லது கட்டாயம் என்பதற்குப் பதிலாக, உரிய ஆலோசனையின் வாயிலாக தீர்க்கப்பட வேண்டும். இல்லையெனில், உலகின் உயர்கல்வி மையமாக கருதப்படும் அமெரிக்காவின் அந்தஸ்து குலைக்கப்படும் அபாயம் ஏற்படும்.
கல்வி துறையில் தடையின்றி வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில், அரசியலோ, பாதுகாப்பு சார்ந்த கோணமோ என்பதையும் மீறாமல், சமநிலையாகப் பிரச்னைகளை அணுகும் முறையே தற்போதைய சூழலில் தேவை.